Tuesday, December 18, 2012

ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இந்தியா

மொபைல் போன் சந்தையில், ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியா, இந்த வகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இதன் வளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இணையத்தில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில், இதுவரை 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் இடத்தில் பிரேசில், அடுத்து ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. 
இந்தியாவில், மொத்த மொபைல் போன்களில் 4% என்ற அளவில் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இதனால், ஆண்டுக்கு ஆண்டு 52% என்ற அளவில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சி சீனா மற்றும் அமெரிக்காவினைக் காட்டிலும் அதிகமாகும். உலக அளவில், தற்போது நூற்றி பத்து கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளில், தற்போது ஐபேட் விற்பனை ஆறு மடங்காக அதிகரித்து வருகிறது. ஐ போன் விற்பனையைக் காட்டிலும் மிக அதிக வேகத்தில் இதன் விற்பனை உள்ளது.
இணையப் பயன்பாட்டினைப் பொருத்த வரை, 2008–12 ஆண்டுகளில் 8.8 கோடி பயனாளர்கள் இருந்த நிலையில், இப்போது 13 கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 26% இந்தப் பிரிவு வளர்ந்துள்ளது. இந்த வகையில் சீனா முதல் இடத்தில், மொத்தம் 53 கோடியே 80 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர். மொத்த ஜனத்தொகையில் 40% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இணைய ஜனத்தொகை, மொத்த ஜனத்தொகையில் 11% மட்டுமே. பன்னாட்டளவில் இணையப் பயன்பாட்டினையும், மொபைல் பயன்பாட்டினையும் ஆய்வு செய்த மேரி மீக்கர் என்ற ஆய்வாளர் இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளார்.